சனி, 4 அக்டோபர், 2008

*******தமிழன் என்று சொல்லடா ***** தலை (இருந்தால்) நிமிர்ந்து நில்லடா

தமிழன்
குடிக்க தண்ணீர் கேட்டால்
குடியிருந்த மக்களை
குழுவாக வந்தடிப்பார்கள்

தமிழ் நாட்டில்
அனைத்து பயிரும் வாட
அணை போட்டு தடுப்பார்கள்
கேள்விகள் கேட்டால்
கேட்பாரற்று அடிப்பார்கள்

கண்ணீர் விட்டாலும்
தண்ணீர் தரும்
கருநாடக இல்லை

ஆனால் மின்சாரம் இல்லையென சொல்லாமல்
மின்னலென கொடுக்க தமிழகம் இருக்கிறது!

அழுது புலம்பியதும்
அணை கட்ட மறுக்கும் கேரளா இல்லை

ஆனால்
அடுத்தவர் விழாவிற்கு அரசாங்க விடுமுறை
அளிக்க தமிழ் நாடு இருக்கிறது!!

வந்தாரை எல்லாம் வாழ வைத்த பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு
ஆனால்
வாழ்ந்த தமிழனை எல்லாம் சீரழித்த பெருமை வந்தவனுக்கே உண்டு!!!

தமிழன் என்று சொல்லடா, தலை (இருந்தால்) நிமிர்ந்து நில்லடா



ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

மழை

இன்று வரை
இல்லை மழை
எதிர் வீட்டு பறவை ( பாவை )
ஏமாற்றிப் பறந்தது
எதிர்பாராத மழை
என் கண்களிலிருந்து !!!!

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

பிரதிபலன்

கோவிலுக்குள்
சென்று வந்த சாம்பல்
திருநீறானது!!!
கற்பூரம் ஆரத்தி ஆனது!!
வெளியே குழாயடியில்
பிடித்த தண்ணீர்
தீர்த்தமானது!!
வழக்கமாக செய்த
சாதம் பிரசாதம் ஆனது!!!
அனைத்தையும் எடுத்துச்
சென்ற மனிதன்
மனிதனாகவே வந்தான்!

மனம் வீசும் காகிதப்பூ

சிறு வயதில்
நீயுன் தலையில் வைத்து
அழகு பார்த்த
காகிதப்பூ
இன்னமும் மணம் குறையாமல்
என் புத்தகத்தில்...............

புதன், 17 செப்டம்பர், 2008

விசேட வகுப்பு

விடுமுறை நாளிலும்
பள்ளிக்குச் செல்லும்
பாலகர்கள்;
படிக்கவா, இல்லை??
புசிக்க!?!
வரவேற்கிறது
வறுமையின்
வகுப்புகள்!!!
சத்துணவு கூடங்கள்!!!

வியாழன், 11 செப்டம்பர், 2008

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல் வருமா

திருநெல்வேலி :

பொதிகை மலையில் தோன்றிய நதி என்றுமே வற்றாத நதியாம் தாமிரபரணி ஆற்றின் உதவியோடு வாழும் அழகிய மாநகராட்சி .

அற்புதமாய் வீற்றிருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாளின் திருக்கோயில் மற்றொரு சிறப்பம்சமாகும் .

பெயர்க்காரணம் :

எங்கள் ஊரில் ஏழை விவசாயி சிவனை துதிபாடிக்கொண்டிருந்தார் . அவர் சிவனிடம் நீ நேரில் வந்து காட்சி கொடு எனக்கேட்க உடனே அவர் ஒப்புக் கொண்டார். சிவனின் வருகைக்காக அவன் பல இடத்தில் யாசித்து பெற்ற நெல்மணிகளை காய வைத்து இருந்தார் . இரவில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த போது சிவன் கனவில் வந்து நான் நாளை உன் வீட்டிற்கு வருகிறேன் எனக்கூறினார். ஆனால் அன்று இரவே பலத்த மழை பெய்தது, விவசாயிக்கு எதுவும் புரியவில்லை , காட்டில் அவர் காயவைத்த நெல்மணிகள் நிச்சயம் மழை நீரோடு அடித்து செல்லப்படிருக்கும். அழுதுகொண்டே சென்றார். அங்கு அவருக்கு ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது . அவர் காய வைத்த இடம் மட்டும் நனையாமல் இருந்தது. மழையில் இருந்து நெல்லை நனையாமல் காப்பாற்றிய சிவனுக்கு நன்றி கூறினார். அன்றில் இருந்து அந்த இடம் நெல்லை காத்த வேலி என்றும் பின்னர் மருகி நெல் வேலி என்றும் நெல்லை காத்தவர் மரியாதைக்குரியவர் என்பதால் திரு என்பதை அடைகுறியிட்டு திரு+நெல்+வேலி என்றும் நெல்லை காப்பாற்றிய அப்பர் நெல்லையப்பர் என்றும் பெயரிடப்பட்டது. மேலும் இந்த கோயிலில் சிவனும் பார்வதியும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாளாக காட்சி தருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் சூன் சூலை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும்.

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் நெல்லை மாநகராட்சியின் மையத்தில் இருக்க நான்கு ரத வீதிகளும் முக்கிய வர்த்தகமையமாகப்பட்டது.

கோயிலின் சிறப்பாவது :

பாண்டிய மன்னர்களால் பதிமூன்றாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் முடிந்த இந்த கோயிலில் "சுயம்பு லிங்கம் " அதாவது தரையில் இருந்து தானாகவே (சுயமாகவே) எழுந்த சிவலிங்கம் இங்குள்ளது.

மேலும் பல அழகிய சிற்பங்களும் , ச, ரி , க, ம, ப, த, நி எனும் ஏழு சுவரங்களை நினைவுபடுத்தும் வகையில் இசைத்தூண்கள் இங்கு இருப்பது மிக ஆச்சரியமான ஒன்று. விலை மதிக்க முடியாத நகைகளும் , தங்க அல்லி த்தாமரை தடாகம் (தெப்பக்குளம்) மிகவும் பிரசித்தி பெற்றது. கோயிலின் வெளிபிரகாரத்தில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பான ஒன்றாக விளங்குகிறது. இந்த கட்டுரையை படிக்கும் பலர் அதில் இருந்து பாடங்களை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் ஒரு முக்கியமான ஒன்று என்னவெனில் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமெனில் கோயிலின் வலது புற நடராசர் முன்பு அமர்ந்து அங்கு உள்ள சதுரக்கல்லில் உங்களது இரு கைகளையும் தரையில் வைத்து சிறிது நேரம் தியானித்து பார்த்தால் கைகள் இருந்தும் சேர்ந்திருக்கும் , அப்படியெனில் நீங்கள் நினைத்தவை நடக்கும் என்பது ஒரு அய்தீகம். இல்லையெனில் அந்த முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது ஒரு எண்ணம்.

இதுதான் கோயிலின் சிறப்பு.


நெல்லையின் அடுத்த சிறப்பு

ஈரடுக்கு மேம்பாலம் :

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஈரடுக்கு மேம்பாலம் இதுவேயாகும். ஆயிரத்து எழுபத்தி நான்கில் உருவாக்கப்பட்ட இது எண்ணூறு மீட்டெர் நீளம் கொண்டது. திருக்குறளை போன்று இரண்டு அடுக்குகளில் உள்ளதால் இது திருவள்ளுவர் பாலம் என்றும் ரெட்டை பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் மேலே கனரக வாகனங்களும் கீழே மித ரக வாகனங்களும் செல்கின்றன .

அடுத்த முக்கியமான ஒன்று : தாமிரபரணி ஆறு

நாங்கள் சிறு வயதில் குளித்து விளையாடிய வற்றாத நதி, இது பொதிகை மலையில் தோன்றி பின்னர் அங்கிருந்து பாய்ந்து அனைத்து கிராம நகரங்களை இணைத்து எங்களுக்கு அனைத்து வளத்தையும் சுகத்தையும் தருகின்றது. இதில் குளித்தவர்களுக்கு எந்த வியாதியும் வருவதில்லை , வந்ததில்லை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா நதிகளும் வற்றிவிட்ட பொழுதிலும் இந்த நதி மட்டும் வற்றாமல் பாய்ந்து கொண்டிருந்த வரலாறு இருக்கிறது. இந்த ஆறு இரண்டு நகரங்களை மையமாக கொண்டு ஓடுகிறது . அவை பாளையங்கோட்டை மற்றும் நெல்லை சந்திப்பு ஆகும்.

இரட்டை நகரம்

அன்றைய ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்த ஆறு அவர்களின் வியாபாரத்திற்கு இடைஞ்சலாக இருந்தது. ஆகையால் பாளையங்கோட்டையில் இருந்து நெல்லை சந்திப்பிற்கு வருவதற்கு அவர்கள் ஒரு ஆற்று பாலத்தை கட்டினார்கள். அதுதான் இப்போது இரண்டு நகரங்களை இணைக்கும் முக்கியமான பாலமாகும்.

புனித தேவாலயம்

பாளையங்கோட்டையில் கதிட்ரல் தேவாலயத்தில் உள்ள ஊசி கோபுரம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். இது கிபி ( ஆயிரத்து அறுநூற்றி அறுபது ) இல் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இதில் உள்ள சிறப்பு என்னவெனில் இது வெறும் முப்பது நாட்களில் கட்டிமுடிக்க பட்டதாக சொல்லப்படுகிறது. இது கட்டி முடிக்க ரூபாய் இரண்டாயிரம் ஆனதாக வும் கூடுதல் தகவல்.

நெல்லையை பொறுத்தவரை இங்கு அனைத்து சமுதாயத்தினரும் சரி சமமாக வாழ்கிறார்கள்.

உதாரணமாக நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் இந்து மதத்தினரும் , ஆற்றுப்பாலம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் இசுலாமியச்சகொதரர்களும் , பாளையங்கோட்டையில் கிருத்துவ தோழர்களும் வசிக்கின்றனர்.

இங்கு பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகம். பாளையங்கோட்டையில் உள்ள சவேரியார் மற்றும் தூய யோவான் கல்லூரி , சதக் அப்துல்லாஹ் கல்லூரியும் , பேட்டை ம.தி.தா இந்து கல்லூரியும் மிகவும் பழமை வாய்ந்த சிறப்பு பெயர் வாங்கிய தலைசிறந்த கல்லூரிகளாகும். இதில் பயின்ற பலர் இன்று நல்ல நிலையில் உலகின் பல மூலையில் இருந்து இதை படித்து க்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ம.தி.தா என்பது மதுரை திரவியம் தாயுமானவர் இந்து க்கல்லூரியின் சுருக்கெழுத்து ஆகும்.

ம.தி.தா கல்லூரியின் கட்டிடக்கலையில் ஒரு சிறப்பு என்னவெனில் அந்த கல்லூரியை வானத்தில் இருந்து பார்த்தால் எம்.தி.ட்டி என்று ஆங்கில எழுத்தின் வடிவம் தெரியுமாறு கட்டியுள்ளார்கள். இதெல்லாம் ஒரு சிறப்பாகவே நான் கருதி எழுதுகிறேன்.

மேலும் பெண்களுக்கு என்று தனி கல்லூரிகளும் இங்கு உள்ளது. அவை சாராள்தக்கர் , அரசு மகளிர் கல்லூரி, சாரதா கல்லூரி என்பதாகும்.

போக்குவரத்து:

நெல்லையை பொறுத்தவரை கோவையை அடுத்து தனியார் பேருந்துகள் அதிகம் இயங்கும் மாநகராட்சி இதுவேயாகும். இரவு பனிரெண்டு மணி வரை அனைத்து வழித்தடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. பின்னர் காலை நான்கு மணியில் இருந்து மறுபடியும் பேருந்துகள் இயங்குகின்றன.

திரையரங்குகள்:

நெல்லை நகரத்தில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. நமது நண்பர்களின் சந்தோசத்திற்காக அந்த பெயர்களை இங்கு வெளியிடுகிறேன், ரத்னா, பார்வதி, சென்ட்ரல் , பூர்ணகலா, ராயல், அருணகிரி, கணேஷ் (பாப்புலர்) , சிவசக்தி, பேரின்பவிலாஸ் , இலட்சுமி (எதற்கு பெயர் பெற்றது) என்று அனைவருக்கும் தெரியும். இதில் வேடிக்கை என்னவெனில் இந்த அனைத்து திரையரங்குகளுக்கு நடுவில் தான் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் உயர் நிலைப் பள்ளிகளும் நடந்தது.

பெயர் பெற்று விளங்கிய பள்ளிகள் :

சாப்டர் மேனிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, மந்திரமூர்த்தி , கல்லணை பெண்கள் நகராட்சி பள்ளி , ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி என பள்ளிகூடங்களும் இருந்தது.

இந்த அடியேன் படித்தது சாப்டர் மேனிலைப்பள்ளி, என் இனிய நண்பர்களே நீங்களும் இந்த பள்ளிதான் என்றால் மிக்க மகிழ்ச்சிதான் ;

மேலும் எங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்து இருப்பது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமாகும். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து செயல்படும் இது மிகப் பெரிய பரப்பளவில் காணப்படுகிறது. இது நட்சத்திர உரிமையை பெற வில்லை என்றாலும் இதற்க்கு இன்றளவிலும் நல்ல பெயர் உண்டு.

திருநெல்வேலி என்றாலே நினைவுக்கு வரும் அல்வாவை பற்றி கூறவேண்டும்

வட நாட்டில் இருந்து வந்த ஒரு வியாபாரி (சேட்டு) தொடங்கிய இந்த அங்காடியின் சிறப்பு இதன் வியாபார நேரம் மாலை ஆறு மணியில் இருந்து இரவு பதினோரு மணி வரை.

அங்காடியின் சிறப்பு : கடையின் பரப்பளவு ஒரு சிறிய அறைதான், வாடிக்கையாளர்கள் வெளியில் நின்றுதான் அல்வா வாங்க வேண்டும். கடையில் அலங்கரிக்க பட்ட விளக்குகள் எதுவும் கிடையாது. ஒரே ஒரு சீரோ வாட்ஸ் விளக்கு மட்டும்தான். அதுவும் முருகன் படத்தில் போடபட்டிருக்கும். கடையில் தராசு கிடையாது. அவர் கையால் எடுத்து போடும் அளவுதான் . அந்த அளவுக்கு சரியான அளவாக இருக்கும். (இதை படிக்கும் யாராவது அந்த சேட்டு பெயர் தெரிந்தால் பதில் அனுப்பவும், நன்றி. ) . இது மாலையில் இருட்டில் நடக்கும் வியாபாரம் என்பதால் இதற்கு "இருட்டு கடை அல்வா" என்றே பெயர் பெற்றது. அல்வாவின் சிறப்பு இது தாமிரபரணி தண்ணீரில் உருவாக்கபடுவதே ஆகும். நாங்கள் எங்களின் பால பருவத்தில் நண்பர்களோடு சுற்றி விட்டு மாலையில் வந்து வெறும் நூறு அல்வா சாப்பிடுவோம், அது அப்படியே தொண்டையில் வழுக்கி செல்லுமே என்ன ஒரு சந்தோசம் மனதிலே, இப்பொழுது ஆயிரம் மைசூர் பாகு சாப்பிட்டாலும் அதற்கு ஈடு கிடையவே கிடையாது. இதை சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே இது தெரியும்.

அதுசரி சிலர் சொல்லுவார்கள் எல்லோருக்கும் அல்வா கொடுத்திட்டான் என்று! அழகான இனிப்பினை இப்படிச்சொல்லுகிரார்களே என்று பலர் ஆதங்கப்படுவது தெரிகிறது, தமிழ்மணம் இணையத்தில் கூட சிலர் வருத்தப்பட்டார்கள் , அமைதிப்படையில் சத்யராஜும் , மணிவண்ணனும் அல்வா கொடுப்பதை பேசுகிறார்கள் என்று!, ஆனால் உண்மையில் அல்வா கொடுப்பது என்பது என்னவெனில் "அல்வா எப்படி தொண்டையில் நம் பற்கள் படாமல் வழுக்கிச் செல்கிறதோ , அதுபோலே சத்யராஜும் எவருக்கும் பிடிகொடுக்காமல் வழுக்கிச் செல்கிறார் எனபதே அதன் பொருள். இது எப்படி இருக்கு நம்ம அல்வா ? ஆகையால்

இனிமேல் எல்லோரும் எல்லோருக்கும் அல்வா கொடுங்கள் .

இசுலாமிய , கிருத்துவ சகோதரர்கள் அதிகம் உள்ளதால் எங்கள் அனைவருக்குமே மறக்கமுடியாத ஒன்று மாலை நேர பரோட்டா உணவு வகை. அதனின் அருமை பெருமை அதனை விட்டு ஏதோ ஒன்றை அதே பெயரில் சாப்பிடும் பொழுதுதானே தெரிகின்றது. தோழர்களே நீங்கள் நெல்லை வந்தால் நிச்சயம் இதையெல்லாம் கேட்டு ரசித்து ருசித்து கொள்ளுங்கள்.

இது தவிர எங்களின் சுற்றுலாத்தலங்கள்:

பாபநாசம் அகத்தியர் அருவி, சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மற்றும் குற்றால அருவிகள் மிகவும் பெயர் வாங்கியவை ஆகும்.

மற்றொரு முக்கியமான அருவி குற்றாலம் , பல அருவிகளை மற்றும் இயற்கை வளங்களை கொண்டுள்ள இயற்கை கடவுள் இதுவேயாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்த்திருக்கும் எங்கள் மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் பாபநாசம் அணைகள் இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கின்றது.

அங்கே சென்று அஞ்சு நிமிடம் நின்றாலும் கிடைக்கும் அந்த சுகம் அரை நாள் முழுக்க செயற்கை அருவியில் இங்கே நின்றாலும் கிடைக்காது.

சொர்க்கம் உங்களுக்கு மிக அருகில் .....
நெல்லை மண்ணை தொட்டுப் பாருங்கள்

விண்ணின் மன்னர்கள் ஆனாலும் நாம்
மண்ணின் மைந்தர்கள் தாம் ;

வாருங்கள் நம் மண்ணை வளர்ப்போம்,
வருங்கால புரட்சிச் சமுதாயத்தை படைப்போம்!!

நெல்லையில் பிறந்தவன் தரணியின்
எல்லை வரை சிறந்தவன் ;;

--

புதன், 10 செப்டம்பர், 2008

ஈரப் பதம்

மழையில் நனைந்த உடல்
மறுநிமிடம் உலர்ந்தது
ஆனால் அப்போது
அவள் தந்த பரிசு
இன்னமும்
ஈரமாய் என் கன்னத்தில்

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

வண்ணம்

அடர்ந்த ஆகாயத்தில்
அழகான ஓவியம் - ஓவியனின் எண்ணம்;

வெள்ளை சீலைக்காரிக்கு
கிடைத்த வண்ணச் சீலை - விதவையின் ஏக்கம்;

புதுக்கட்சிக்கு தயாராக
புது வண்ணக் கொடி - புதுக்கட்சி தலைவரின் பூரிப்பு;

பிரித்து சேர்ப்பது
எப்படி - விஞ்ஞானியின் விந்தை;

எப்போதும் உன்னுடன் இருக்க ஆசை
எப்போது வருவாய் ? கவிஞனின் அழைப்பு;

நீல வானத்திற்கு கிடைத்த
நீண்ட தூரிகை - ஏழையின் ஏமாற்றம்;

வளைந்த ஏழு கோடுகளாம்
மண்ணில் வந்ததில் இருந்தே தெரியவில்லையே -
குருடனின் ஆதங்கம்;






சனி, 6 செப்டம்பர், 2008

என் பிம்பம்





சலனமற்று கிடந்த என் இதய குளத்தில்
காதல் கற்களை எறிந்து போனவள் நீ

பாவம் இன்னமும் அல்லாடிக் கொண்டிருக்கிறது
பரிதாபத்துக்குரிய என் பிம்பம்!!!

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

முதன் முதலாக

அன்றுதான் அவளைச் சந்தித்தேன்
முதல் சந்திப்பிலேயே அவள் புன்னகைத்தாள்

அழகான முகம்
அடர்த்தியான கேசம்
நட்சத்திரம் மின்னும் கண்கள்
ஆப்பிள் போன்ற கன்னங்கள்

புன்னகையில் பூத்த மலர்களாய்
கன்னத்தில் விழும் குழிகள்

அவள் கைவிரல் தனை நீட்டி
அழகாய் எனை அருகில் அழைத்தாள்

அவளை மார்போடு அணைத்து
உச்சி முதல் பாதம் வரை முத்தமிட்டு
உரக்க அவள் காதில் சொன்னேன்


இனியும் உன்னை பிரிய மாட்டேன்

என் அன்பு "மகளே"


தியாகம்


"தியாகம்" என்ற தலைப்பில்
கவிதை எழுத ச்சொன்னார்கள் !!
நான் "என் அம்மா" என
உன் பெயரை எழுதி
முதல் பரிசினை பெற்றேன்.

வியாழன், 4 செப்டம்பர், 2008

எனது முதல் கவிதை

எனக்கு கவிதைகள் எழுதுவது என்றால் மிகவும் பிடிக்கும்

எனது முதல் கவிதை

( ) நியாயம்

தாய்க்கும் மகனுக்கும் கடும் யுத்தம்
மகன் மிதிக்க தாய் இறக்க
மகன் மட்டும் சுதந்திரமாய்
அரசு மருத்துவமனையில்
ஆறுமாத குழந்தையாக!!!

-நெல்லை ஆசி

புதன், 3 செப்டம்பர், 2008

வருக ஆதரவு தருக

வணக்கம்

நான் சிவா , எனது சொந்த ஊர் வற்றாத நதி தாமிரபரணி ஆறு பாயும் திருநெல்வேலி ஆகும்.

எங்கள் ஊர் அல்வாவுக்கு மட்டும் அல்ல , காந்திமதி அம்பாள் கோயிலுக்கும், வற்றாத ஜீவநதி போன்று வற்றாத அன்புக்கும், பெயர் பெற்ற ஊர்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்குதான், இப்பொழுது வந்தோரை எல்லாம் வாழ வைக்கும் சென்னையில் வேலை செய்கிறேன்.

எனக்கு சிறு வயதில் இருந்தே தமிழில் ஆர்வம் அதிகம். ஆகையால் நான் எனது எண்ணச்சிதறல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன். அதற்கு உங்கள் ஆதரவினை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் உங்கள் கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவும்.

நன்றி

இவண்,
நெல்லை ஆசி

வணக்கம்

வணக்கம்,

நான் எனது கவிதை தொகுப்புகளை இந்த இணைய தளத்திலிருந்து தொடங்க உள்ளேன் , அதற்கு என் மனம் , நலம் அறிந்த நண்பர்களும் , முகம் தெரியா நண்பர்களும், தமிழ் சான்றோர்களும் கருத்துக்களையும் , அறிவுரைகளையும் வாரி வழங்க வேண்டுகிறேன்.

நன்றி

நெல்லை ஆசி